தொலைக்காட்சி 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறந்த, முக்கியமானதோர் ஒளிபரப்புச் சாதனமாகும். ஒளிபரப்பப்படும் படங்களை அலை வாங்கிகள் (antennas) மூலம், வானலைகளிடமிருந்து பெற்று காட்சிப் பெட்டியின் திரையில் ஒளிபரப்புவதே இதன் செயலாகும்.
தொலைக்காட்சிக் கண்டுபிடிப்புக்குப் பின்னர் நிகழ்ச்சிகள் எல்லாப் பகுதிகளிலும் ஒளிபரப்புச் செய்யப்பட்டன. இருப்பினும், குன்றுகள், மலைகள், பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடுகள் ஆகிய பகுதிகளில் வானலைகள் தடங்கலின்றி செல்வது கடினமாக இருந்ததால் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பில் தடை உண்டாயிற்று. எடுத்துக்காட்டாக அமெரிக்காவின் பெனிசில்வேனியா மாநிலம் இத்தகு தடங்கலைக் கொண்ட பகுதியாகும். இங்கு தொலைக்காட்சி நல்ல வகையில் ஒளிபரப்பாவதற்கு வசதியான முறையைக் கண்டறிவதற்கான கட்டாயம் ஏற்பட்டது; இதன் விளைவாக உருவானதே கேபிள் தொலைக்காட்சியாகும்.
விண்வெளியிலிருந்து வானலைகளைத் திரட்டுவதோடு மட்டுமல்லாமல் கேபிள்கள் (கம்பிகள்) வாயிலாக, அவற்றை வீட்டினுள் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளிபரப்புச் செய்வதற்கும் இச்சாதனம் பயன்படுகிறது. இது "சமுதாய அலைவாங்கித் தொலைக்காட்சி (Community Antenna T.V.--CAT)" என அழைக்கப்பட்டது. ஆற்றல் வாய்ந்த அலைவாங்கிகளில் கேபிள்களை இணைத்து மிகுதியான பரப்பளவில் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டது.
ஜான் வால்சன் மற்றும் ஜெரோம் பார்சன் எனும் இரு அமெரிக்கர்கள் 1948ஆம் ஆண்டு பெனிசில்வேனியா மாநிலத்தில் உள்ள அல்டோரியா ஓரிகன் நகரத்தின் மிக உயர்ந்த கட்டடத்தின் மேலே, திறன் வாய்ந்த அலைவாங்கி ஒன்றை நிறுவினர். சுமார் 120 கி.மீ. தூரத்தில் உள்ள சீடல் தொலைக்காட்சி மையத்திலிருந்து நிகழ்ச்சிகளின் வானலைகள் இந்த அலைவாங்கியினால் பெறப்பட்டன. இந்த அலைவாங்கியில் இணைக்கப்பட்ட கேபிள்கள் வாயிலாக அந்நிகழ்ச்சிகள் நகரத்தின் பல வீடுகளிலும் ஒளிபரப்பாயின. இத்திட்டத்தின் வெற்றிக்குப் பின்னர் அமெரிக்காவின் பல நகரங்களுக்கும் இத்தொழில் நுட்பம் பரவியது. இன்று அமெரிக்காவில் ஏறக்குறைய 10,000 கேபிள் தொலைக்காட்சி அமைப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை தொலைக்காட்சி ஒளிபரப்பு 1959ஆம் ஆண்டு முதன் முதலாக தில்லியிலும், பின்னர் நாட்டின் பிற பகுதிகளிலும் தொடங்கியது. சுமார் 15 ஆண்டுகள் கழித்து கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பும் துவங்கியது.
தொடக்கத்தில் 5 மெகா ஹெர்ட்ஸ் கூடுதல் அலைவரிசையில் தொலைக்காட்சி சமிக்கைகளை ஒளிபரப்பும் திறன் கொண்ட பல இரட்டைவடக் கேபிள்கள் (கம்பிகள்) பயன்படுத்தப்பட்டன. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெருமளவுக்கு நேரடியாகவே ஒளிபரப்பப் படுகின்றன. மேலும் ஒரே கேபிள் அமைப்பைக் கொண்டு பல தடங்களின் (சேனல்களின்) நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இதன் காரணமாக கல்வி, விளையாட்டு, வானிலை, அரசியல், பொழுதுபோக்கு, பங்குச் சந்தை, செய்திகள் என எல்லாத் துறைகளும் சார்ந்த பல்வேறு தொலைக்காட்சி ஒளிபரப்புகளை வீட்டிலிருந்தே காண்கிறோம்.
0 comments:
Post a Comment